கடல்மேலே அலைபோலே

பேராசையும், போதாமையும் வழிநடத்தும் தேடலில் சிலவற்றை நாமே தேடிக் கண்டடைவதும், மற்றதை முந்தையவர்கள் நமக்காக விட்டுச் செல்வதும் வழக்கம். மக்கள் தொடர்பாளர்கள் நிரம்பி வழியும் சமகாலத்திலும் அடுத்த படம் குறித்த செய்தியோ, பாடல்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதோ புதிராகவே இருக்கும் ராஜாவின் கிடங்குகள்தான் நம்மை எத்தனை விதத் தேடலகளுக்கு ஆட்படுத்துகின்றன. படங்களின் எண்ணிக்கையில் தொடங்கி, மொழிவாரியாக என்னென்ன படங்கள், எந்த வருடத்தில் பாடல்கள் வெளிவந்தன(அல்லது வெளிவரவில்லை) என்று இந்தத் தேடலுக்கே ஒரு பட்டியல் தேவைப்படும். இவற்றில் மிகமுக்கிய முயற்சியாக @r_inba முன்னெடுப்பதைக் குறிப்பிடவேண்டும்: http://ilayaraja.forumms.net/t103-accurate-comprehensive-database-for-ir-movies-songs

ராஜா இந்தப் புதிரை அங்கீகரிக்கவும் தவறியதில்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேட்டியொன்றில் ‘தங்களின் பாடல்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைப்பதில்லையாமே?’ என்ற கேள்விக்கு ராஜாவின் பதில்: ‘அது என் ரசிகர்களின் வேலை, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். படைப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதில் வியப்பேதும் இல்லை. பாக், சலீல் தா தொடங்கி நமக்கு ஊர், பெயர் தெரியாத பல கலைஞர்களுக்கு ராஜா ஒரு முதல்தர ரசிகன். தேடலின் இன்பத்தையும், அந்தப் பயணம் தரும் அனுபவங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்த கலைஞனும் கூட.

பாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருவது தன்னியல்பான நிகழ்வு. பல நாட்களுக்குப் பிறகு ‘காட்டு வழி கால்நடையா’(’அது ஒரு கனாக்காலம்’) கேட்டபோது நடந்தது: https://twitter.com/mayilSK/status/349984182778343425 அது தந்த உந்துதலால், நேற்று படத்தையும் பார்க்கத் துவங்கினேன். Titleஇல் ஓடிய இந்தப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தவுடன் ஆர்வமும் வருத்தமும் கூடவே கடைசிவரை பார்த்துவிட்டேன். படத்தின் நாயகன் எதிர்பாராவிதத்தில் சிறைக்குச் செல்கிறான். அதற்குத் தந்தையின் அலட்சியமும் ஒரு காரணமென்று தெரிந்ததால் அவரை வெறுக்கிறான். தன் மீது அன்பு கொண்ட அம்மாவையும், காதலியையும் பிரிந்ததால் அவன் வாடும் நேரத்தில் மேற்சொன்ன பாடலின் மூன்றாவது சரணமாக அசரீரித்தன்மையுடன் பாடுகிறார் இந்த ராட்சசன்:

(’அது ஒரு கனாக்காலம்’ – ‘கூண்டுக்குள்ளே’)

இதைப் போல ஒவ்வொரு படத்திலும் பல தருணங்களைப் பின்னணி இசையில் முழுமையாக்கி இருப்பதை தினந்தினம் பார்க்கிறோம். நவின், கானாபிரபா போன்றவர்கள் ஒரு படத்தை அக்கக்காகப் பிரித்துப் பின்னணி இசையை மட்டும் நமக்குப் பரிசளிக்கும்போது ஆனந்தக்கூத்தேதான். கூடவே இவற்றையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்கிற குற்றவுணர்ச்சியையும் கூட்டிவிடுகின்றனர். முதலில் சொன்னதைப் போல, இவர்கள்தான் அந்த ‘முந்தையவர்கள்’. இருந்தாலும் இந்தக் குற்றவுணர்ச்சியை நேரில் சந்திப்பதை எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியும்?

’அது ஒரு கனாக்கால’த்தைப் போல பல நூறு படங்களைப் பார்த்து அவை அளிக்கும் சூழல்களில் மொட்டையின் விளையாட்டை நுகர்வதென்பது வாழ்நாள் லட்சியம்தான். ஏனெனில், அந்தச் சூழல்களை, அவை எவ்வளவு மலிவானவையாக இருந்தாலும், அவற்றை இயக்குனர்களைவிட பலமடங்கு முன்னகர்த்துவது ராஜாவின் இசையாகத்தான் இருக்கும். இத்தனைக் கறார்த்தனமையுள்ள இசையை நெருங்கக் குறைந்தபட்ச அளவிலாவது நமக்கு அந்தச் சூழலின் அறிமுகம் இருக்கவேண்டும்.

சென்ற வருடம் நண்பர்களின் (@sicmafia, @prasannar_, @paviraksha மற்றும் பலர்) உந்துதலால் இணைய வானொலியொன்றை  ஆரம்பித்தார் @anathai. ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர் எழுதியதைப் படித்திருந்தாலும், சென்ற வருடம்தான் இவரிடம் பேசுமளவு அறிமுகம் கிடைத்தது. சேகரிப்பதிலும், வகைப்படுத்துவதிலும் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. இவர் உடன் இருக்கும் தைரியத்தில் மட்டுமே இந்தத் தேடலின் செயல்திட்டமாகப் பின்வருவதை வரித்திருக்கிறோம்:

mafia-radioஒவ்வொரு ஞாயிறும் ஒரு படத்தின் பின்னணி இசையைப் பிரித்து, குறைந்தபட்சச் சூழலுடன்(context in a film) கால வரிசையில் அடுக்கிக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்புவது.

முதல் படமாக இன்று 9 மணிக்கு (IST) ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலிருந்து பின்னணி இசையை ஒலிபரப்பப் போகிறார். அதன் Title மட்டும் இங்கே

இந்த ராட்சசனை அணுக மேலும் ஓர் உத்தியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பின்னெப்போதாவது ஒரு நாள் இவனைப் புரிந்துகொள்ளவும் யாராவது முயற்சி செய்யலாம் இல்லையா?

Links:

http://myradiostream.com/irmafia

http://tunein.com/radio/IlayaRaja-s202044/

On Mobile:

Winamp -> Shoutcast- > Seach for ‘IlayaRaja’

Tunein -> Search for ‘IlayaRaja’

Advertisements