காட்டமுடியும்டா கராத்தே

பாடலாக இல்லாமல் திரைக்கதைக்குத் தகுந்தவாறு அதைப் பலப்படுத்துவதுதான் பின்னணி இசை என்பது நமக்குள் படிந்துபோன பிம்பம். இதன் அடிப்படையே திரைக்கதையை, குறிப்பாக உணர்வெழுச்சிகள் நிறைந்த காட்சிகளை ஒரு பாடல் மந்தப்படுத்திவிடும் என்ற எண்ணந்தான். அதுவும் கடந்த பத்து, இருபது ஆண்டுகளில்தான் இது மிக அதிகமாக ஊன்றிப்போயிருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் பாடல்களே இல்லாத படங்கள்(’குருதிப்புனல்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’) என்று பெருமிதத்தோடு வெளியிடுவதும் நடக்கிறது. ஆடலும் பாடலும் ஊறிப்போயிருக்கும் தமிழ்த் திரையுலகில் அவை இல்லாமல் படங்களை நகர்த்துவதென்பது மிஸ்கின் போன்ற தேர்ந்தவர்களால் மட்டுமே ஆகும் காரியம்.

இச்சூழல் நிலவுதற்கு மேலும் இரண்டு காரணங்களும் உள. முக்கிய காட்சிகளுக்குப் பாடல்களைப் பயன்படுத்தினால் அவை அக்காட்சிகளை மேலும் அழகுறச் செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும், குறைந்தபட்சம் ரசிகனை அங்கிங்கு இழக்காமலாவது இருக்கவேண்டும். அப்படிப் பயன்படுத்தாது பாடல்கள் வேண்டாம் என்று நினைத்தால் பின்னணி இசை அக்காட்சிகளைத் தாங்கி, ரசிகனைத் தன்னோடு பற்றியிழுத்துச் செல்லும்படியாக இருக்கவேண்டும். இவை இரண்டுமே இயக்குனருக்குக் கிடைக்கும் இசையமைப்பாளரைப் பொறுத்தே பாடல்கள் வேண்டாமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும். மேற்கூறிய இரண்டு படங்களுக்கும் இந்த இரண்டு காரணங்களையும் பொருத்திப் பார்க்கலாம்.

காதல் காட்சிகளுக்கு வாயசைவுகள் இல்லாமல் பாடல்களைப் பின்னணியாக அமைப்பது நெடுங்காலமாக நடப்பதென்றாலும், ஐந்து, பத்து நிமிடங்கள் செல்லக்கூடிய இரத்த அழுத்தத்தை ஏற்றும் சண்டைக் காட்சிகளுக்குப் பாடல்களை இசைப்பது அரிது. ’எங்கிட்ட மோதாதே’, ‘சாந்து பொட்டு’ போன்றவை கூட சண்டை, சச்சரவுகள் முடிந்து நாயகன் வெற்றிமிதப்புடன் எதிராளியை எள்ளி நகையாடத்தான் பயன்படுத்தப்பட்டன. மாறாக சண்டை நெடுகப் பின்னணியாக அமைந்ததால்தான் ‘தூள்’ படத்தின் ‘மதுர வீரந்தானே’ பாடல் பெரும்பரபரப்புடன் பேசப்பட்டது.

ஆனால் இது உண்மையாகவே பின்னணியிலும் பின்னால் நிற்கும் பாடல் என்றுதான் சொல்லமுடியும். பரவை முனியம்மா குரலெடுத்துப் பாடும்போது அவரைச் சுற்றிவரும் கேமிரா விக்ரம் அடியாட்களைப் பந்தாடுவதைக் காட்டும்போது பாடல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். ஏனெனில் இங்கு பாடலுக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்புக்கும் தொடர்பில்லை, இந்தப் பாடலை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம் என்கிற அளவில்தான் இருக்கும்.

இதே ‘சாந்து பொட்டு’ பாடலைப் பயன்படுத்திய, பாடல்களையே தன் படத்தில் தவிர்த்த கமல் முன்னொரு காலத்தில் நடித்த ’ராம் லஷ்மன்’(1981) படத்தில்தான் பின்னணிப் பாடலாகிப் போன ‘நாந்தான் உங்கப்பண்டா’ சுமார் ஏழு நிமிடங்களுக்கு நீள்கிறது. நாயகி தன்னிடம் வம்பிழுத்து ஏமாற்றிய நாயகனைப் பழிவாங்க வெவ்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ந்த ஐந்து அடியாட்களை ஏவுகிறார். அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக நாயகனை அடித்துப் பார்க்க, யானையைத் தம்பியாக பாவிக்கும் நாயகன் டிரெம்பெட் முழங்க வாங்கியதற்குப் பலமடங்கு திருப்பி அடிப்பதுதான் களம்.

அடியாட்கள் நாயகனை அடிப்பதும், நாயகன் தன் வீரத்தைப் பறைசாற்றும்விதம் அவர்களைத் திருப்பி அடிப்பதும் பாடலுக்கு மூன்னீட்டாக அமைந்துள்ளது. குத்துச் சண்டை, கராத்தே, சிலம்பம், வாள், மல்யுத்தம் என்று ஒவ்வொருவராக தன் திறமையைத் திரையில் காட்ட, ராஜாவோ அந்தந்த கலைகளுக்கு ஏற்றவாறு தன் கைவரிசையை இசையில் காட்டுகிறார். வாள் வீசிடும்போது அடியாழத்தில் குதிரை ஓடுவதைக் காணமுடியும். மல்யுத்தவீரன் கமலைத் தூக்கிப்போடும்போது பெருமலையிலிருந்து பாறாங்கல் உருண்டுவிழும்.

இருதரப்பு அறிமுகங்களும் நன்றாக முடிந்தபின் நாயகன் அவர்களை எங்ஙனம் அடித்து விரட்டுகிறான் என்பதுதான் பாடலும் சண்டை வடிவமைப்பும் இரண்டறக் கலந்துநிற்கும் நான்கு நிமிடங்கள். உண்மையில் இது தமிழ்த் திரைப்பாடலுக்கு உரிய இலக்கணங்களில் அமையவில்லை, சண்டைக் காட்சிகளுக்கே உரிய சிறியளவே கொண்ட துரிதகதி பின்னணி இசைத் துணுக்குகள் ஒன்றிணைந்து இடையிடையில் வரிகளைப் பாடவைத்தாற் போலத்தான் இருக்கின்றது. எனினும் முழுமுதலாக மிகவும் சீரான, இறுக்கமான பாடல்.

ராஜாவின் சுரங்கங்களில் உலாவும் ‘Finders Keepers’ ’சொல்ல சொல்ல’ என்ற தொகுதியில் இந்தப் பாடலைச் சேர்த்தபின்னர்தான் என் போன்ற சாதாரணர்களுக்கு இதன் உன்னதம் புரிந்தது. படத்துடன் சேர்ந்து பார்த்தபின் எப்படி திரைக்கதைக்காகவே அதிலும் சண்டைக் காட்சிக்காகவே ராஜா புனைந்து நெய்திருக்கிறார் என்பதும் உறைத்தது. அவரே சொன்னதுதான், இங்கும் பதிந்து வைக்கிறேன்: “எந்த விதத்தில் இசையமைப்பேன் என்று எனக்கே தெரியாது”

இன்றைய வாரம் (August 10th 2013) மாபிய ரேடியோவில் ‘ராம் லஷ்மன்’ ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பவிருக்கிறோம். அதன் முன்னோட்டம்:

மேலும் பார்க்க: http://mafiaradio.wordpress.com/

Advertisements