ஆற்றொழுக்கு

மலேசியா-வாசுதேவன்மலேசியாவை வித்தகக் கலைஞராக நிறுவுவதற்கு யாரும் பிரயத்தனப்படுவதேயில்லை. அதற்கான தேவைகள் இருப்பதாகவும் எனக்குத் தெரிந்ததில்லை. இருப்பினும் மலேசியாவைப் பிறருக்கு (குறிப்பாக டிஎம்எஸ்ஸுக்கு) மாற்றாகவோ, பிறரை நகலெடுக்கும் குரலாகவோ முன்னிறுத்தும் அடாசு வேலையைச் சிலர் தொடர்ந்து செய்வதில் எனக்குப் பெரும் வருத்தமும் கோபமுமுண்டு.

பின் எழுபதுகளில் மேலெழுந்து வரும் ராஜா எப்படி தன் முதல் வணக்கத்தை மெல்லிசை மன்னருக்கு வைத்தாரோ, அப்படித்தான் ’ஆட்டுக்குட்டி’யில் மலேசியாவும் வலது கையை இடது காலில் வைத்து டிஎம்எஸ்ஸுக்கு வணக்கம் வைத்ததாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னாட்களில் சிவாஜிக்கோ, சத்யராஜுக்கோ பாடும்போது இந்த மரியாதை தொடர்ந்ததென்பதுவரைதான் சரி. இத்தொடரின் முக்கியப் புள்ளியாக நான் நினைப்பது:

(’இதயமே’ – ’அடுத்தாத்து ஆல்பர்ட்’) – இங்கு மேற்சொன்ன இருவருமே பயணிக்கின்றனர், தனித்தன்மையுடன். இவற்றை ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு மலேசியாவின் ஆளுமையை ’அவருக்கேயுரிய இடத்தில’மர்ந்து மட்டுமே பேச நினைக்கிறேன்.

ராஜா உருவாக்கிய அல்லது கட்டமைத்த களங்களில் எனக்கு மிக நெருக்கமான ஒன்றை நான் #RajaGrande என்று வகைப்படுத்துவதுண்டு. இசையறிவு துளியுமில்லாததால் இவ்வகைமையைத் தெளிவாக வரையறுக்க என்னால் இதுவரை முடிந்ததில்லையெனினும் இன்று துணிந்து முயற்சிசெய்கிறேன்: ஓரளவு மெத்தனமான அல்லது அதிகபட்ச வேகமில்லாத மெட்டு, அதைச் சுற்றி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்படியோ அல்லது மெட்டை இருமடங்கு உயர்த்திப் பிடித்தோ செல்லும் தாளக்கட்டு. தறிகெட்ட வெள்ளத்தில் துடுப்புகளின்றித் தன்னியல்பான வேகத்தில் நகரும் ஓடமொன்றில் அமர்ந்து இருகரைகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போன்றதுதான். இப்படி இருந்தால்தான் நான் நினைக்கும் உணர்வு கிடைக்கும் என்பதுமில்லை. எதற்கும் இந்தப் பட்டியலைப் பார்த்திடுங்களேன்: http://www.paadal.com/playlist/rajafans/GrandeRaja

இக்களம் தரும் பிரம்மாண்டத்தில் ஒரு பாடகர் பெரிதாக என்ன செய்துவிட முடியும்? மலேசியா தனதாக்கிக் கொண்ட #RajaFolkஉம் எனக்கு நானே அடையாளப் படுத்திக்கொண்ட #RajaGrandeவும் ஒன்றிணைவதாக நினைக்கும் பாடல் இது: (’கன்னிப் பொண்ணு’ – ’நினைவெல்லாம் நித்யா’)

கன்னிப்பொண்ணு கைமேல(லே)

கட்டிவெச்ச பூமாலை(லெ)

பாடல் முழுவதுமே நமக்கு லட்டுதான் என்றாலும் திராட்சை நிரம்பிய பகுதிகளாக நான் சரணங்களை எடுத்துக்கொள்கிறேன். பல்லவியின் இரண்டு வரிகளை மேலே தந்ததற்கும் நான் கற்பித்துக் கொண்ட காரணங்களுண்டு – சம்பந்தப்பட்டது ராஜா என்பதால் இவ்வித கற்பிதங்களுக்கு முன்னனுமதி பெற்றுவிட்டேன். முதல் சரணத்தில் ஆண் பெண்ணுக்கு மாலையணிவிப்பதாகவும் இரண்டாவதில் பெண் அணிவிப்பதாகவும் நினைப்பதுதான் அது. குறிப்பிட்ட நபர் ஒரு வரியை முன்னெடுத்துச் சென்று சிறிது தயக்கம் கலந்த வெட்கத்துடன் அடுத்தவரிடம் ஒப்படைப்பதும் அவர் அதைத் தாங்கி ஏற்பதுமாகச் சரணங்களைத் தொடுத்திருக்கிறார் ராஜா.

இவையனைத்தும் நடக்கும் அட்டகாசமான நாடகத்தை நிகழ்த்திக் காட்ட நமக்குக் கிடைத்திருப்போர் மலேசியாவும் சுசீலாவும். திரைநடிப்பென்பதைப் பின்னணியில் மட்டுமின்றி திரையிலும் முயற்சிசெய்தவர் மலேசியா. பாடல் முழுவதும் தன் நடிப்பாற்றலைக் குரலில் அனாயசமாகக் கடத்திவிடுகிறார். ’.. அச்சம் கொண்டது..’, ’..நெஞ்சு துடிக்கிது..’ ஆகிய இடங்களில் மட்டுமே சுசீலாவுக்கு இது கைகூடுகிறது. இருவரது வயதையும் மேற்சொன்ன வகைமைகளையும் நாம் நினைத்துக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கிறேன்.

‘வானம் மெல்ல’வின் ’தருணம் தருணம்’ போன்றதொரு நெகிழ்வை இங்கு ‘முத்தம் தர தம்தர யாரது கண்டது’வில் கொண்டு வரும் வாய்ப்பு மலேசியாவுக்குக் கொடுக்கப்பட்டதுதான்(அமைந்ததாகவே இருந்தாலும்) ’முத்தாய்ப்பு’.

Advertisements