ஆற்றுப்படுத்துதல்

silகடந்த பத்தாண்டுகளில் தொலைக்காட்சிக்கும் எனக்கும் உள்ள இடைவெளி குறித்துப் பெரிதும் யோசித்ததில்லை. நமக்குத் தேவையான, பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்துக்கொள்வதில் பல நன்மைகள் இருக்கின்றனவே. இசையருவி, சன்மியூசிக் போன்றவற்றைப் பார்க்காமலிருப்பதைத்தான் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். இவை நாம் ஓய்ந்து அமர்ந்திருக்கும் வேளைகளில் உதவலாமே ஒழிய, முடிந்தவரை பாடல் காட்சிகளைத் தவிர்க்கவேண்டும் என்கிற ராஜா ரசிகனுக்குத் தேவையான அடிப்படை நெறிக்குச் சரிப்படாது. உங்களுக்கே உரிய பொறுமையைக் கொஞ்சமே கொஞ்சம் அதிகப்படுத்திக்கொண்டு இதைக் கண்டுகளிக்கவும்: http://www.splicd.com/P2AJG3LU7sg/140/144  (நிழல்கள் ரவி – ‘பூங்கதவே’ – ’நிழல்கள்’)

இயக்குநர் சுகா, இன்னும் சில ராஜா ரசிகர்களின் யூட்யூப் வீடியோக்கள் வெறும் ஆடியோக்களாகவே இருப்பதும் தற்செயலானதல்ல. ஒரு பாடலை நம்முடைய சிந்தனைத்தளத்தில் நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் கருவிகளைக் கொண்டு தகவைமைத்துக் கொள்வது அலாதியான சுகம். என்னளவில் இந்தச் செயல்முறையைச் செழுமைப்படுத்துவதிலும் விரிவடைவதிலும் நண்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். முன்பொருமுறை இதையொட்டிப் பேசிக்கொண்டிருந்தபோது அருள்செல்வன்(@arulselvan) எந்தவொரு பாடலையும் தான் முதலில் ஓவியமாகத் தீட்டிக்கொள்வதாகச் சொன்னார். நாம் ஒவ்வொருவரும் இப்படி ஏதோ ஒரு வழிமுறையில்தான் அருவமான பாடலை நெருங்குகிறோம், நெருக்கமாக்கிக் கொள்கிறோம்.

நேற்றிரவு பிரேமுடன் (@anandhame) இந்தப் பாடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன்:

(‘வானம்பாடி’ – ‘தலையணை மந்திரம்’).

மூன்று வருடங்களாகப் பலமுறை கேட்ட பாடல்தான். நண்பர்கள் இருவர் அருகில் அமர்ந்தபடி நெடுநேரம் எதுவும் பேசாமல் தூரத்துக் காட்சியில் தொலைந்துபோவதாகத்தான் சிந்தித்ததுண்டு. என்னென்று சொல்லமுடியாதபடி எவ்வித நோக்கமுமில்லாது என்னை ஆற்றுப்படுத்தக் கூடிய பாடலாகிப் போனது. எவ்வளவோ யோசித்துப் பார்த்திருந்தாலும், இந்நாள் வரை இந்தப் பாடலின் காட்சியமைப்பைப் பார்த்ததில்லை, முயற்சி செய்யவுமில்லை.

இப்பாடலை மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள முயன்றபோது தோன்றியதைத்தான் பதிந்துவைக்கிறேன். இதை முழுமுதலாகச் சோகப்பாடலென்றோ, தத்துவப்பாடலென்றோ வரையறுத்துவிட முடியாது. ஏற்றத்தாழ்வுகள் அடங்கிய வாழ்வின் இருமைகளையும் இரண்டுமே நிகழாத வெறுமைகளையும் சேர்த்தே அங்கீகரித்துச் செல்லக்கூடிய இயல்பு இதன் அடிப்படையில் உள்ளது. தந்திக்கம்பிகள் விரைந்து செல்வதில் துவங்கும் முன்னீட்டிசையில் புல்லாங்குழலின் இனிமை நம்மை மேலிழுத்துச் செல்லும்போதே பல்லவி தொடங்கியதும் பொத்தென்று பூமிக்குக் கொண்டுவருவதில் குறியாயிருக்கிறார் ராஜா. ஏன் ஐயா இத்தனை அவசரம்?

பல்லவியின் தாளத்தை தப்லாவும், காங்கோவும்(சரிதானே?) ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து உருவாக்கும் படிமத்தில் நிறைகிறது மேற்சொன்ன இருமை. பாட்டின் நடுவே வரும் இரண்டு இடையீடுகளுமே கலங்கிநிற்கும் நிகழ்காலத்தில் அடிபடிந்திருக்கும் நினைவோடைகளாகத் தெரிகின்றன. இதெல்லாம் கூடச் சரிதான் என்று நினைக்கும்போதுதான் தத்தித் தத்தி நிற்பவனின் காலை வாரிவிடுகிறார். நிலவும் சோகத்தைப் பகிர்ந்து அதிலிருந்து வெளிவருவதாக அமைந்துள்ள சரணங்களில் தாளப்படிமத்தை முழுமையாக தப்லாவே எடுத்துக்கொள்கிறது. சரணங்கள் முடிந்து பல்லவிகள் தொடங்கும்போதுதான் காங்கோ அதன் இடத்தில் வந்தமர்கிறது. எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் ராஜா?

எவ்வகை இசைத்துண்டையும் வெறும் உணர்வுக் குவியலாக்காமல், துல்லியமாகப் பிரித்தடுக்கி, இவ்வித விளையாட்டுக்களை நமக்கு நாமே பழகிக்கொள்ளவும் வெளியமைத்துத் தருவதில்தானே ராஜா நம்மை வென்றெடுக்கிறார்? சிலருக்கு இந்த விளையாட்டு முதல் நுகர்விலே பூர்த்தியாகலாம், சிலருக்கு மாதங்களாகும், என்போன்றவர்களுக்கு இன்னும் அதிகம். ஒன்று முடிந்தால் என்ன, அதான் நம் காலத்துக்கும் வகை வகையாக வாரி இரைக்கிறாரே?

பிரேமுக்கு எழுதியது: http://www.twitlonger.com/show/n_1rjusus

பாடல் வரிகள்: http://www.twitlonger.com/show/n_1rjusvv , நன்றி: பிரேம்

Advertisements