ஆற்றுப்படுத்துதல்

silகடந்த பத்தாண்டுகளில் தொலைக்காட்சிக்கும் எனக்கும் உள்ள இடைவெளி குறித்துப் பெரிதும் யோசித்ததில்லை. நமக்குத் தேவையான, பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்துக்கொள்வதில் பல நன்மைகள் இருக்கின்றனவே. இசையருவி, சன்மியூசிக் போன்றவற்றைப் பார்க்காமலிருப்பதைத்தான் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். இவை நாம் ஓய்ந்து அமர்ந்திருக்கும் வேளைகளில் உதவலாமே ஒழிய, முடிந்தவரை பாடல் காட்சிகளைத் தவிர்க்கவேண்டும் என்கிற ராஜா ரசிகனுக்குத் தேவையான அடிப்படை நெறிக்குச் சரிப்படாது. உங்களுக்கே உரிய பொறுமையைக் கொஞ்சமே கொஞ்சம் அதிகப்படுத்திக்கொண்டு இதைக் கண்டுகளிக்கவும்: http://www.splicd.com/P2AJG3LU7sg/140/144  (நிழல்கள் ரவி – ‘பூங்கதவே’ – ’நிழல்கள்’)

இயக்குநர் சுகா, இன்னும் சில ராஜா ரசிகர்களின் யூட்யூப் வீடியோக்கள் வெறும் ஆடியோக்களாகவே இருப்பதும் தற்செயலானதல்ல. ஒரு பாடலை நம்முடைய சிந்தனைத்தளத்தில் நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் கருவிகளைக் கொண்டு தகவைமைத்துக் கொள்வது அலாதியான சுகம். என்னளவில் இந்தச் செயல்முறையைச் செழுமைப்படுத்துவதிலும் விரிவடைவதிலும் நண்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். முன்பொருமுறை இதையொட்டிப் பேசிக்கொண்டிருந்தபோது அருள்செல்வன்(@arulselvan) எந்தவொரு பாடலையும் தான் முதலில் ஓவியமாகத் தீட்டிக்கொள்வதாகச் சொன்னார். நாம் ஒவ்வொருவரும் இப்படி ஏதோ ஒரு வழிமுறையில்தான் அருவமான பாடலை நெருங்குகிறோம், நெருக்கமாக்கிக் கொள்கிறோம்.

நேற்றிரவு பிரேமுடன் (@anandhame) இந்தப் பாடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன்:

(‘வானம்பாடி’ – ‘தலையணை மந்திரம்’).

மூன்று வருடங்களாகப் பலமுறை கேட்ட பாடல்தான். நண்பர்கள் இருவர் அருகில் அமர்ந்தபடி நெடுநேரம் எதுவும் பேசாமல் தூரத்துக் காட்சியில் தொலைந்துபோவதாகத்தான் சிந்தித்ததுண்டு. என்னென்று சொல்லமுடியாதபடி எவ்வித நோக்கமுமில்லாது என்னை ஆற்றுப்படுத்தக் கூடிய பாடலாகிப் போனது. எவ்வளவோ யோசித்துப் பார்த்திருந்தாலும், இந்நாள் வரை இந்தப் பாடலின் காட்சியமைப்பைப் பார்த்ததில்லை, முயற்சி செய்யவுமில்லை.

இப்பாடலை மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள முயன்றபோது தோன்றியதைத்தான் பதிந்துவைக்கிறேன். இதை முழுமுதலாகச் சோகப்பாடலென்றோ, தத்துவப்பாடலென்றோ வரையறுத்துவிட முடியாது. ஏற்றத்தாழ்வுகள் அடங்கிய வாழ்வின் இருமைகளையும் இரண்டுமே நிகழாத வெறுமைகளையும் சேர்த்தே அங்கீகரித்துச் செல்லக்கூடிய இயல்பு இதன் அடிப்படையில் உள்ளது. தந்திக்கம்பிகள் விரைந்து செல்வதில் துவங்கும் முன்னீட்டிசையில் புல்லாங்குழலின் இனிமை நம்மை மேலிழுத்துச் செல்லும்போதே பல்லவி தொடங்கியதும் பொத்தென்று பூமிக்குக் கொண்டுவருவதில் குறியாயிருக்கிறார் ராஜா. ஏன் ஐயா இத்தனை அவசரம்?

பல்லவியின் தாளத்தை தப்லாவும், காங்கோவும்(சரிதானே?) ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து உருவாக்கும் படிமத்தில் நிறைகிறது மேற்சொன்ன இருமை. பாட்டின் நடுவே வரும் இரண்டு இடையீடுகளுமே கலங்கிநிற்கும் நிகழ்காலத்தில் அடிபடிந்திருக்கும் நினைவோடைகளாகத் தெரிகின்றன. இதெல்லாம் கூடச் சரிதான் என்று நினைக்கும்போதுதான் தத்தித் தத்தி நிற்பவனின் காலை வாரிவிடுகிறார். நிலவும் சோகத்தைப் பகிர்ந்து அதிலிருந்து வெளிவருவதாக அமைந்துள்ள சரணங்களில் தாளப்படிமத்தை முழுமையாக தப்லாவே எடுத்துக்கொள்கிறது. சரணங்கள் முடிந்து பல்லவிகள் தொடங்கும்போதுதான் காங்கோ அதன் இடத்தில் வந்தமர்கிறது. எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் ராஜா?

எவ்வகை இசைத்துண்டையும் வெறும் உணர்வுக் குவியலாக்காமல், துல்லியமாகப் பிரித்தடுக்கி, இவ்வித விளையாட்டுக்களை நமக்கு நாமே பழகிக்கொள்ளவும் வெளியமைத்துத் தருவதில்தானே ராஜா நம்மை வென்றெடுக்கிறார்? சிலருக்கு இந்த விளையாட்டு முதல் நுகர்விலே பூர்த்தியாகலாம், சிலருக்கு மாதங்களாகும், என்போன்றவர்களுக்கு இன்னும் அதிகம். ஒன்று முடிந்தால் என்ன, அதான் நம் காலத்துக்கும் வகை வகையாக வாரி இரைக்கிறாரே?

பிரேமுக்கு எழுதியது: http://www.twitlonger.com/show/n_1rjusus

பாடல் வரிகள்: http://www.twitlonger.com/show/n_1rjusvv , நன்றி: பிரேம்

Advertisements

6 thoughts on “ஆற்றுப்படுத்துதல்

 1. ராசா பாட்டை கேட்கும் போது காட்சிகள் மட்டுமல்ல சொற்களும் கூட எனக்கு ஒட்டுவதில்லை. கேட்கும் நேரத்தில் பாடும் உணர்ச்சிக்கு இணையாக சொற்கள் வருகிறதா, மொட்டையும் இசையையும் தாளத்தையும் சிதைக்காமல் இருக்கிறதா என்பதெல்லாம் பிராசஸ் ஆனாலும், பாட்டு கேட்டு முடித்த பின்னர் இப்ப என்ன கேட்டோம்னு யோசிச்சா டியூன் – இடையிசை இதெல்லாம் நினைவுக்கு வருமளவுக்கு சொற்கள் வருவதில்லை. பாடல்வரிகள் டூயூனை சுமந்து செல்லும் ஒரு கருவியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. பயணம் மனதில் பதியும் அளவுக்கு வாகனம் பதிவதில்லை. அதையும் மீறி பதிவதெல்லாம் மூளையின் செந்த முயற்சியினால் விளைந்த மசில்மெமரிதான்

  நான் ராசா இசையினால் எப்படி சூழ்நிலையை விளக்குகிறார் என்பதை குறித்தே அதிகம் சிந்திக்கிறேன், காட்சிப்படிமங்களை அதை வைத்துத்தான் உருவாக்கிக்கொள்கிறேன். டியூனை அவர் முதலிலேயே தீர்மானித்து விடுவதால் சொற்கள் அதை தீர்மானிப்பதில்லை, மாறாக இயக்குனர் விளக்கிய காட்சி அல்லது படத்தில் இந்த இடத்தில் பாட்டு வைக்கவேண்டும் என்று ராசாவே முடிவுசெய்து அந்த காட்சியின் மூட் இதுதான் என்று அவர் எடுத்த முடிவுக்கு ஏற்றபடி பாடல் வரிகள் அமைந்தால் அது பேரின்பம், அமையவில்லையென்றாலும் கூட ராசா இசையில் பார்த்துக்கொள்வார்.

  இந்த குறிப்பிட்ட பாடலிலும் கூட நீங்கள் குறிப்பிட்டுள்ள உணர்ச்சிகளையே நானும் அடைந்தேன். நினைவிடை தோய்ந்து ஏங்கும், மகிழும் மனம் அதிலிருந்து விடைபெறும் நேரம் வார்த்தை வராத மௌனத்தை எத்தனையோ வகையில் அவர் இசைத்துவிட்டார். அதில் இதுவும் ஒரு மாஸ்டர்பீஸ்.

  அருமையான பதிவு தொடர்ந்து எழுதவும்

  • இந்தப் பதிவில் நான் வரிகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்பதிலிருந்து தெரியவில்லையா மன்னா, நீங்கள் எழுதியதை எழுத்துக்கு எழுத்து ஆமோதிப்பவன் என்று? 😉

   • அதுக்காக இல்லைங்க சும்மா கேப்பு கிடைத்தினால் எழுதி வச்சேன் ;)) வரிக்குவரி உடன்படும் பதிவில் வேறு என்னதான்செய்யுறது ;)))

  • Reading your second paragraph again – Whatay! டெக்விஜய் இப்போது பேசிக்கொண்டிருப்பதற்கான பதில் இங்கு உட்கார்ந்திருக்கிறது. 🙂

 2. அருமை. இழந்து கொண்டிருப்பதை இழந்து கொண்டிருக்கும் போதே சொல்லும் பாடல். அதை உணர்ந்த பதற்றமே இல்லாமல் அமைதியாகப் பாடும் ராஜாவின் குரல் அடையும் ஆழத்தை மீட்டெடுக்கவே கொப்பளிக்கும் இடையிசை. இந்த காண்ட்ராஸ்ட் ராஜாவின் கையெழுத்தைப்போலவே தனித்தன்மையாகிவிட்டது போல. சரியாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் படத்தில் ஏன்,எப்படி இக்காட்சி என்று தெரியாது. அதனாலென்ன.

 3. அடடா…அழகான விவரணங்கள்…ஆனா நாம என்ன மனநிலைல அவரோட இசைய கேட்குறோம்ங்கறதும் இருக்கு..சில சமயம் நம்ம மனநிலையே ஏற்கனவே கேட்ட இசையோட இன்னொரு பரிமாணத்த வெளிப்படுத்தும் விந்தையும் நடப்பதுண்டு…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s