காட்டமுடியும்டா கராத்தே

பாடலாக இல்லாமல் திரைக்கதைக்குத் தகுந்தவாறு அதைப் பலப்படுத்துவதுதான் பின்னணி இசை என்பது நமக்குள் படிந்துபோன பிம்பம். இதன் அடிப்படையே திரைக்கதையை, குறிப்பாக உணர்வெழுச்சிகள் நிறைந்த காட்சிகளை ஒரு பாடல் மந்தப்படுத்திவிடும் என்ற எண்ணந்தான். அதுவும் கடந்த பத்து, இருபது ஆண்டுகளில்தான் இது மிக அதிகமாக ஊன்றிப்போயிருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் பாடல்களே இல்லாத படங்கள்(’குருதிப்புனல்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’) என்று பெருமிதத்தோடு வெளியிடுவதும் நடக்கிறது. ஆடலும் பாடலும் ஊறிப்போயிருக்கும் தமிழ்த் திரையுலகில் அவை இல்லாமல் படங்களை நகர்த்துவதென்பது மிஸ்கின் போன்ற தேர்ந்தவர்களால் மட்டுமே ஆகும் காரியம்.

இச்சூழல் நிலவுதற்கு மேலும் இரண்டு காரணங்களும் உள. முக்கிய காட்சிகளுக்குப் பாடல்களைப் பயன்படுத்தினால் அவை அக்காட்சிகளை மேலும் அழகுறச் செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும், குறைந்தபட்சம் ரசிகனை அங்கிங்கு இழக்காமலாவது இருக்கவேண்டும். அப்படிப் பயன்படுத்தாது பாடல்கள் வேண்டாம் என்று நினைத்தால் பின்னணி இசை அக்காட்சிகளைத் தாங்கி, ரசிகனைத் தன்னோடு பற்றியிழுத்துச் செல்லும்படியாக இருக்கவேண்டும். இவை இரண்டுமே இயக்குனருக்குக் கிடைக்கும் இசையமைப்பாளரைப் பொறுத்தே பாடல்கள் வேண்டாமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும். மேற்கூறிய இரண்டு படங்களுக்கும் இந்த இரண்டு காரணங்களையும் பொருத்திப் பார்க்கலாம்.

காதல் காட்சிகளுக்கு வாயசைவுகள் இல்லாமல் பாடல்களைப் பின்னணியாக அமைப்பது நெடுங்காலமாக நடப்பதென்றாலும், ஐந்து, பத்து நிமிடங்கள் செல்லக்கூடிய இரத்த அழுத்தத்தை ஏற்றும் சண்டைக் காட்சிகளுக்குப் பாடல்களை இசைப்பது அரிது. ’எங்கிட்ட மோதாதே’, ‘சாந்து பொட்டு’ போன்றவை கூட சண்டை, சச்சரவுகள் முடிந்து நாயகன் வெற்றிமிதப்புடன் எதிராளியை எள்ளி நகையாடத்தான் பயன்படுத்தப்பட்டன. மாறாக சண்டை நெடுகப் பின்னணியாக அமைந்ததால்தான் ‘தூள்’ படத்தின் ‘மதுர வீரந்தானே’ பாடல் பெரும்பரபரப்புடன் பேசப்பட்டது.

ஆனால் இது உண்மையாகவே பின்னணியிலும் பின்னால் நிற்கும் பாடல் என்றுதான் சொல்லமுடியும். பரவை முனியம்மா குரலெடுத்துப் பாடும்போது அவரைச் சுற்றிவரும் கேமிரா விக்ரம் அடியாட்களைப் பந்தாடுவதைக் காட்டும்போது பாடல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். ஏனெனில் இங்கு பாடலுக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்புக்கும் தொடர்பில்லை, இந்தப் பாடலை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம் என்கிற அளவில்தான் இருக்கும்.

இதே ‘சாந்து பொட்டு’ பாடலைப் பயன்படுத்திய, பாடல்களையே தன் படத்தில் தவிர்த்த கமல் முன்னொரு காலத்தில் நடித்த ’ராம் லஷ்மன்’(1981) படத்தில்தான் பின்னணிப் பாடலாகிப் போன ‘நாந்தான் உங்கப்பண்டா’ சுமார் ஏழு நிமிடங்களுக்கு நீள்கிறது. நாயகி தன்னிடம் வம்பிழுத்து ஏமாற்றிய நாயகனைப் பழிவாங்க வெவ்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ந்த ஐந்து அடியாட்களை ஏவுகிறார். அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக நாயகனை அடித்துப் பார்க்க, யானையைத் தம்பியாக பாவிக்கும் நாயகன் டிரெம்பெட் முழங்க வாங்கியதற்குப் பலமடங்கு திருப்பி அடிப்பதுதான் களம்.

அடியாட்கள் நாயகனை அடிப்பதும், நாயகன் தன் வீரத்தைப் பறைசாற்றும்விதம் அவர்களைத் திருப்பி அடிப்பதும் பாடலுக்கு மூன்னீட்டாக அமைந்துள்ளது. குத்துச் சண்டை, கராத்தே, சிலம்பம், வாள், மல்யுத்தம் என்று ஒவ்வொருவராக தன் திறமையைத் திரையில் காட்ட, ராஜாவோ அந்தந்த கலைகளுக்கு ஏற்றவாறு தன் கைவரிசையை இசையில் காட்டுகிறார். வாள் வீசிடும்போது அடியாழத்தில் குதிரை ஓடுவதைக் காணமுடியும். மல்யுத்தவீரன் கமலைத் தூக்கிப்போடும்போது பெருமலையிலிருந்து பாறாங்கல் உருண்டுவிழும்.

இருதரப்பு அறிமுகங்களும் நன்றாக முடிந்தபின் நாயகன் அவர்களை எங்ஙனம் அடித்து விரட்டுகிறான் என்பதுதான் பாடலும் சண்டை வடிவமைப்பும் இரண்டறக் கலந்துநிற்கும் நான்கு நிமிடங்கள். உண்மையில் இது தமிழ்த் திரைப்பாடலுக்கு உரிய இலக்கணங்களில் அமையவில்லை, சண்டைக் காட்சிகளுக்கே உரிய சிறியளவே கொண்ட துரிதகதி பின்னணி இசைத் துணுக்குகள் ஒன்றிணைந்து இடையிடையில் வரிகளைப் பாடவைத்தாற் போலத்தான் இருக்கின்றது. எனினும் முழுமுதலாக மிகவும் சீரான, இறுக்கமான பாடல்.

ராஜாவின் சுரங்கங்களில் உலாவும் ‘Finders Keepers’ ’சொல்ல சொல்ல’ என்ற தொகுதியில் இந்தப் பாடலைச் சேர்த்தபின்னர்தான் என் போன்ற சாதாரணர்களுக்கு இதன் உன்னதம் புரிந்தது. படத்துடன் சேர்ந்து பார்த்தபின் எப்படி திரைக்கதைக்காகவே அதிலும் சண்டைக் காட்சிக்காகவே ராஜா புனைந்து நெய்திருக்கிறார் என்பதும் உறைத்தது. அவரே சொன்னதுதான், இங்கும் பதிந்து வைக்கிறேன்: “எந்த விதத்தில் இசையமைப்பேன் என்று எனக்கே தெரியாது”

இன்றைய வாரம் (August 10th 2013) மாபிய ரேடியோவில் ‘ராம் லஷ்மன்’ ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பவிருக்கிறோம். அதன் முன்னோட்டம்:

மேலும் பார்க்க: http://mafiaradio.wordpress.com/

அமைதியை எதிர்நோக்கி

அமைதி. வாழ்வின் பெரும்பாதியில் இந்த அமைதியைத் தேடியோ, அமைதியைத் தழுவும் நிலைகளுக்கு நடுவிலோதான் கடக்கிறோம். பல நேரங்களில் அதன்மீது ஒவ்வாமையோ பயமோகூட இருப்பதுண்டு. கலைத்துக்கொண்டு வெளியில் வந்துவிட எவ்வித முயற்சிகளையும் செய்வதுண்டு. எனினும் அந்த இடைவெளிகள் இயல்பைவிட நீட்டிக்கப்பட்ட அளவிலிருக்கும் போது நிகழும் ஒவ்வொரு கணமும் அடுத்த மைல்கல்லுக்கு ஓட்டமும் நடையுமாகவாவது சென்றுசேரவே மனம் துடிக்கும்.

மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி தன் அபிமான எழுத்தாளரை ஆபத்திலிருந்து காப்பாற்றித் தன் வீட்டிலேயே அடைத்துவைக்கிறாள். அந்த எழுத்தாளர் இச்சிக்கலைப் புரிந்து பின் தப்பிக்கத் துடிப்பதுதான் ’ஜூலி கணபதி’(2003). பாலுமகேந்திரா இதன் மூலக்கதையை ‘Misery'(1987) என்ற நாவலிலிருந்து எடுத்திருக்கிறார். ஆனால் அவர் அந்த நாவலின் அடிப்படையில் வந்த ‘Misery'(1990) படத்தையும் பார்த்திருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்.

அடிப்படை ஒன்றானாலும் இரண்டும் வெவ்வேறு படங்களாகத்தான் எனக்குத் தெரிகின்றன. அமெரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் உள்ள பருவகாலங்களின் வேறுபாடே இதற்கு முதற்காரணம். முன்னதில் பனிக்காலமும் தமிழ்ப் படத்தில் மழைக்காலமும் படங்களின் பின்புலங்கள். ஆங்கிலப் படத்தில் அடர்பனிக்காலம் தரும் தளர்ச்சியைப் படம்நெடுக உணர்த்துவதையும், படம் முடிந்தபின்னும் அது தொடரும் வகையில் இருப்பதையும் பின்னணி இசை மூலம் உணர்த்துகிறார் இசையமைப்பாளர் மார்க் செய்மன். படத்தின் முதல் காட்சியிலிருந்தே நம் மனத்தில் துன்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் விதம் இசையமைத்திருக்கிறார். இறுதிக் காட்சியிலும் இதை நீட்டித்துப் படம் தரும் தாக்கத்தை நீட்டித்திருக்கிறார்.

ஜீலி கணபதி இதற்கு நேரெதிர். மனித நடமாட்டத்தைச் சில மணி நேரங்களே மழையால் நிறுத்தமுடியும் என்பதைப் போல் அமைதிக்கு நடுவே நிகழும் ஒரு மணிநேரமாகவே படத்தை மாற்றியமைத்துள்ளார் பாலு. படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் அன்றாட நிகழ்வுகளே – பின்னணி இசையென்று எதுவுமே கிடையாது. ஆற்று வெள்ளத்தில் காருக்குள் சிக்கிய தன்னைக் காப்பாற்றித் தன் வீட்டில் சிகிச்சையளிக்கும் சரிதாவை ஜெயராம் கண் திறந்து பார்க்கும்போதுதான் ராஜா தன் இருப்பை உணர்த்துகிறார்.

’Misery’யில் நாயகனுக்குக் குடும்பம் இருப்பதாகக் காட்டப்படுவதில்லை. அதனால் நாயகனின் உணர்ச்சிகளிலும், பின்னணி இசையிலும் அவனின் பயமும், துன்பமும் மட்டும்தான் நமக்குக் கடத்தப்படுகிறது. ஜூலி கணபதிக்கு ‘Misery’யைவிடக் கூடுதலான குறிக்கோளும் உணர்வுகளும் உண்டு – ஏக்கம், பிரிவாற்றாமை. ஜெயராம் திருமணமாகிக் குழந்தை உள்ளவர். முதல் பதினைந்து நிமிடங்களில் இவர்களை அறிமுகப்படுத்துவதுடன் படம்நெடுக ரம்யாகிருஷ்ணன் தன் கணவனை எதிர்பார்த்து ஏங்கும் காட்சிகளும் உண்டு. குடும்பம் மீண்டும் நெகிழ்ச்சியுடன் இணைவதாகத்தான் படமும் முடிகிறது.

இந்தப் பின்புலங்களை எல்லாம் முன்வைத்தே நாம் இரண்டு படங்களின் பின்னணி இசையையும் புரிந்துகொள்ள வேண்டும். தன்னைக் காப்பாற்றியவள் மனநலமற்றவள் என்பது தெரிந்ததும் ஜெயராம் உணரும் கையறு நிலையையும், தன் மனைவியை நினைத்து ஏங்குவதையும் மறுபக்கம் ரம்யாகிருஷ்ணன் படும் துன்பத்தையும் நாற்பது நொடிகளில் இரண்டு சரடுகளில் தீட்டியிருக்கிறான் நம் இசையரசன். While the percussion retains the tension, strings and the flute speak for Jeyaram’s sorrow as a solo violin seethes in taking Ramya’s side and ends with invoking Ithayame. அலகிலா விளையாட்டு!

http://splicd.com/nrccIYBSWCo/2785/2835

(ஒலி மட்டும்)

இந்தத் தொடரைத் தவிர மற்ற காட்சிகளும் அவைதரும் உணர்வுகளும் இரு படங்களிலும் ஒன்றேதான். நாம் பல படங்களில் பார்த்துக் கேட்டுப் பழகியதானாலும், ஒப்பிட்டு உணர்ந்தோத இந்தப் படங்கள் வசதி தருகின்றன. படத்தின் அடிச்சரடு மார்க் செய்மனுக்குத் தரும் குறிக்கோள் – பயம், அது தரும் துன்பம் – இரண்டையும் படம்முழுக்க செவ்விசை மூலம் கடத்துவது. நம்மாள் அதற்கு நேரெதிராச்சே. துல்லியம் என்பதே ராஜாவின் மொழி. ஒரு காட்சி தரும் எல்லாக் கருத்துக்களையும், உணர்வுகளையும் தனக்கே உரிய மொழியில் ரசிகனுக்கு உணர்த்திக்கொண்டே செல்வதே குறிக்கோள்.

பத்து நிமிடங்கள் – திகிலும், அமைதியும் மாற்றி மாற்றி உச்சத்தைத் தொடும் பத்து நிமிடங்கள் – இரு இசையமைப்பாளர்களும் படத்தின் தன்மைக்கேற்ப அற்புதமாக விளையாடியிருக்கும் களம்.

Misery:

ஜூலி கணபதி:

http://splicd.com/nrccIYBSWCo/4597/5204

வெளியில் சென்றிருக்கும் பெண் திரும்பி வருவதற்குள் அடைபட்டுக் கிடக்கும் அறையிலிருந்து வெளிவந்து வீட்டைச் சுற்றிப் பார்த்து, யாருடனும் பேசமுடியுமா, தப்பிக்கமுடியுமா, உதவி கிடைக்குமா என்று எவ்வளவோ யோசித்துச் சுற்றி அலைகிறான் நாயகன். அந்தப் பெண் திரும்பி வரும் நேரத்தில் மீண்டும் அறை வந்து அடைந்து கொள்வதுடன் காட்சி முடிகிறது. ராஜாவை நாம் ஆராதிக்கும் முழுமுதற் காரணமே துல்லியம்தானே. இவ்வளவும் நடப்பதை அங்கங்கு தன் மாயவித்தையில் அடிக்கோடிட்டபடியே செல்கிறார். மார்க் செய்மனுக்கு இது தேவைப்படவுமில்லை, செய்யவுமில்லை என்பது வேறு கதை.

அறைக் கதவைத் திறக்கக் கீழே கிடக்கும் கொண்டை ஊசியை எடுத்து பயம், கால் வலி, கள்ளத்தனத்துடன் மெல்ல நகர்ந்து கதவைத் திறக்க முயற்சி செய்கிறார்:

உதவிக்கு அழைக்க முடியுமோ என்று ஆர்வமும், நம்பிக்கையும் மேலிட தூரத்தில் இருக்கும் தொலைபேசியை நெருங்குவதும், அது பழுதடைந்தை அறிந்து வேதனையடைவதும்:

எதேச்சையாகத் திரும்பும்போது மேசையில் இருந்த பொம்மையைத் தன் இருசக்கர வண்டி தட்டிவிட, அதையெடுத்து மேலே வைக்கிறார். அந்த பொம்மை முன்னிருந்த திசையில் பார்க்காதது பின்னால் துன்பத்தில் நேரிடும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை:

இப்படி ஒவ்வொன்றையும் அடிக்கோடிடத்தான் வேண்டுமா என்றால் ஆமாம், இந்தப் படத்தின் தன்மை அப்படி. பயம், துன்பம், ஏக்கம், ஆற்றாமை, கள்ளத்தனம் என்று அனைத்தையும் கண்டபின்னர் ஜெயராம் குடும்பத்துடன் இணைவதில் உள்ள மகிழ்ச்சியும் கிடைக்கும் அமைதியும் நிலைப்பதுதான் படத்தின் களம். இவற்றையெல்லாம் தெளிவாக நாம் உணர்வதுதான் படத்தின் வெற்றி, ராஜாவின் வெற்றி.

இந்த வாரம்(27-July-2013) IRMR இல் ஒலிபரப்ப இருக்கும் பின்னணி இசைத்தொகுப்பின் teaser:

மேலும் பார்க்க:

http://mafiaradio.wordpress.com/

கடல்மேலே அலைபோலே

பேராசையும், போதாமையும் வழிநடத்தும் தேடலில் சிலவற்றை நாமே தேடிக் கண்டடைவதும், மற்றதை முந்தையவர்கள் நமக்காக விட்டுச் செல்வதும் வழக்கம். மக்கள் தொடர்பாளர்கள் நிரம்பி வழியும் சமகாலத்திலும் அடுத்த படம் குறித்த செய்தியோ, பாடல்கள் வெளியிடப்பட்டாலும் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதோ புதிராகவே இருக்கும் ராஜாவின் கிடங்குகள்தான் நம்மை எத்தனை விதத் தேடலகளுக்கு ஆட்படுத்துகின்றன. படங்களின் எண்ணிக்கையில் தொடங்கி, மொழிவாரியாக என்னென்ன படங்கள், எந்த வருடத்தில் பாடல்கள் வெளிவந்தன(அல்லது வெளிவரவில்லை) என்று இந்தத் தேடலுக்கே ஒரு பட்டியல் தேவைப்படும். இவற்றில் மிகமுக்கிய முயற்சியாக @r_inba முன்னெடுப்பதைக் குறிப்பிடவேண்டும்: http://ilayaraja.forumms.net/t103-accurate-comprehensive-database-for-ir-movies-songs

ராஜா இந்தப் புதிரை அங்கீகரிக்கவும் தவறியதில்லை. ஆரம்பக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேட்டியொன்றில் ‘தங்களின் பாடல்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைப்பதில்லையாமே?’ என்ற கேள்விக்கு ராஜாவின் பதில்: ‘அது என் ரசிகர்களின் வேலை, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். படைப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதில் வியப்பேதும் இல்லை. பாக், சலீல் தா தொடங்கி நமக்கு ஊர், பெயர் தெரியாத பல கலைஞர்களுக்கு ராஜா ஒரு முதல்தர ரசிகன். தேடலின் இன்பத்தையும், அந்தப் பயணம் தரும் அனுபவங்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்த கலைஞனும் கூட.

பாடலைக் கேட்கும்போது கண்ணீர் வருவது தன்னியல்பான நிகழ்வு. பல நாட்களுக்குப் பிறகு ‘காட்டு வழி கால்நடையா’(’அது ஒரு கனாக்காலம்’) கேட்டபோது நடந்தது: https://twitter.com/mayilSK/status/349984182778343425 அது தந்த உந்துதலால், நேற்று படத்தையும் பார்க்கத் துவங்கினேன். Titleஇல் ஓடிய இந்தப் பாடலை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரிந்தவுடன் ஆர்வமும் வருத்தமும் கூடவே கடைசிவரை பார்த்துவிட்டேன். படத்தின் நாயகன் எதிர்பாராவிதத்தில் சிறைக்குச் செல்கிறான். அதற்குத் தந்தையின் அலட்சியமும் ஒரு காரணமென்று தெரிந்ததால் அவரை வெறுக்கிறான். தன் மீது அன்பு கொண்ட அம்மாவையும், காதலியையும் பிரிந்ததால் அவன் வாடும் நேரத்தில் மேற்சொன்ன பாடலின் மூன்றாவது சரணமாக அசரீரித்தன்மையுடன் பாடுகிறார் இந்த ராட்சசன்:

(’அது ஒரு கனாக்காலம்’ – ‘கூண்டுக்குள்ளே’)

இதைப் போல ஒவ்வொரு படத்திலும் பல தருணங்களைப் பின்னணி இசையில் முழுமையாக்கி இருப்பதை தினந்தினம் பார்க்கிறோம். நவின், கானாபிரபா போன்றவர்கள் ஒரு படத்தை அக்கக்காகப் பிரித்துப் பின்னணி இசையை மட்டும் நமக்குப் பரிசளிக்கும்போது ஆனந்தக்கூத்தேதான். கூடவே இவற்றையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்கிற குற்றவுணர்ச்சியையும் கூட்டிவிடுகின்றனர். முதலில் சொன்னதைப் போல, இவர்கள்தான் அந்த ‘முந்தையவர்கள்’. இருந்தாலும் இந்தக் குற்றவுணர்ச்சியை நேரில் சந்திப்பதை எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியும்?

’அது ஒரு கனாக்கால’த்தைப் போல பல நூறு படங்களைப் பார்த்து அவை அளிக்கும் சூழல்களில் மொட்டையின் விளையாட்டை நுகர்வதென்பது வாழ்நாள் லட்சியம்தான். ஏனெனில், அந்தச் சூழல்களை, அவை எவ்வளவு மலிவானவையாக இருந்தாலும், அவற்றை இயக்குனர்களைவிட பலமடங்கு முன்னகர்த்துவது ராஜாவின் இசையாகத்தான் இருக்கும். இத்தனைக் கறார்த்தனமையுள்ள இசையை நெருங்கக் குறைந்தபட்ச அளவிலாவது நமக்கு அந்தச் சூழலின் அறிமுகம் இருக்கவேண்டும்.

சென்ற வருடம் நண்பர்களின் (@sicmafia, @prasannar_, @paviraksha மற்றும் பலர்) உந்துதலால் இணைய வானொலியொன்றை  ஆரம்பித்தார் @anathai. ஐந்து வருடங்களுக்கு முன்பே இவர் எழுதியதைப் படித்திருந்தாலும், சென்ற வருடம்தான் இவரிடம் பேசுமளவு அறிமுகம் கிடைத்தது. சேகரிப்பதிலும், வகைப்படுத்துவதிலும் இவருக்கு இருக்கும் வெறித்தனத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. இவர் உடன் இருக்கும் தைரியத்தில் மட்டுமே இந்தத் தேடலின் செயல்திட்டமாகப் பின்வருவதை வரித்திருக்கிறோம்:

mafia-radioஒவ்வொரு ஞாயிறும் ஒரு படத்தின் பின்னணி இசையைப் பிரித்து, குறைந்தபட்சச் சூழலுடன்(context in a film) கால வரிசையில் அடுக்கிக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்புவது.

முதல் படமாக இன்று 9 மணிக்கு (IST) ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலிருந்து பின்னணி இசையை ஒலிபரப்பப் போகிறார். அதன் Title மட்டும் இங்கே

இந்த ராட்சசனை அணுக மேலும் ஓர் உத்தியாகத்தான் இதைப் பார்க்கிறோம். பின்னெப்போதாவது ஒரு நாள் இவனைப் புரிந்துகொள்ளவும் யாராவது முயற்சி செய்யலாம் இல்லையா?

Links:

http://myradiostream.com/irmafia

http://tunein.com/radio/IlayaRaja-s202044/

On Mobile:

Winamp -> Shoutcast- > Seach for ‘IlayaRaja’

Tunein -> Search for ‘IlayaRaja’

ஆற்றுப்படுத்துதல்

silகடந்த பத்தாண்டுகளில் தொலைக்காட்சிக்கும் எனக்கும் உள்ள இடைவெளி குறித்துப் பெரிதும் யோசித்ததில்லை. நமக்குத் தேவையான, பிடித்த நிகழ்ச்சிகளை மட்டும் இணையத்தில் பார்த்துக்கொள்வதில் பல நன்மைகள் இருக்கின்றனவே. இசையருவி, சன்மியூசிக் போன்றவற்றைப் பார்க்காமலிருப்பதைத்தான் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். இவை நாம் ஓய்ந்து அமர்ந்திருக்கும் வேளைகளில் உதவலாமே ஒழிய, முடிந்தவரை பாடல் காட்சிகளைத் தவிர்க்கவேண்டும் என்கிற ராஜா ரசிகனுக்குத் தேவையான அடிப்படை நெறிக்குச் சரிப்படாது. உங்களுக்கே உரிய பொறுமையைக் கொஞ்சமே கொஞ்சம் அதிகப்படுத்திக்கொண்டு இதைக் கண்டுகளிக்கவும்: http://www.splicd.com/P2AJG3LU7sg/140/144  (நிழல்கள் ரவி – ‘பூங்கதவே’ – ’நிழல்கள்’)

இயக்குநர் சுகா, இன்னும் சில ராஜா ரசிகர்களின் யூட்யூப் வீடியோக்கள் வெறும் ஆடியோக்களாகவே இருப்பதும் தற்செயலானதல்ல. ஒரு பாடலை நம்முடைய சிந்தனைத்தளத்தில் நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் கருவிகளைக் கொண்டு தகவைமைத்துக் கொள்வது அலாதியான சுகம். என்னளவில் இந்தச் செயல்முறையைச் செழுமைப்படுத்துவதிலும் விரிவடைவதிலும் நண்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். முன்பொருமுறை இதையொட்டிப் பேசிக்கொண்டிருந்தபோது அருள்செல்வன்(@arulselvan) எந்தவொரு பாடலையும் தான் முதலில் ஓவியமாகத் தீட்டிக்கொள்வதாகச் சொன்னார். நாம் ஒவ்வொருவரும் இப்படி ஏதோ ஒரு வழிமுறையில்தான் அருவமான பாடலை நெருங்குகிறோம், நெருக்கமாக்கிக் கொள்கிறோம்.

நேற்றிரவு பிரேமுடன் (@anandhame) இந்தப் பாடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன்:

(‘வானம்பாடி’ – ‘தலையணை மந்திரம்’).

மூன்று வருடங்களாகப் பலமுறை கேட்ட பாடல்தான். நண்பர்கள் இருவர் அருகில் அமர்ந்தபடி நெடுநேரம் எதுவும் பேசாமல் தூரத்துக் காட்சியில் தொலைந்துபோவதாகத்தான் சிந்தித்ததுண்டு. என்னென்று சொல்லமுடியாதபடி எவ்வித நோக்கமுமில்லாது என்னை ஆற்றுப்படுத்தக் கூடிய பாடலாகிப் போனது. எவ்வளவோ யோசித்துப் பார்த்திருந்தாலும், இந்நாள் வரை இந்தப் பாடலின் காட்சியமைப்பைப் பார்த்ததில்லை, முயற்சி செய்யவுமில்லை.

இப்பாடலை மெல்ல மெல்லப் புரிந்துகொள்ள முயன்றபோது தோன்றியதைத்தான் பதிந்துவைக்கிறேன். இதை முழுமுதலாகச் சோகப்பாடலென்றோ, தத்துவப்பாடலென்றோ வரையறுத்துவிட முடியாது. ஏற்றத்தாழ்வுகள் அடங்கிய வாழ்வின் இருமைகளையும் இரண்டுமே நிகழாத வெறுமைகளையும் சேர்த்தே அங்கீகரித்துச் செல்லக்கூடிய இயல்பு இதன் அடிப்படையில் உள்ளது. தந்திக்கம்பிகள் விரைந்து செல்வதில் துவங்கும் முன்னீட்டிசையில் புல்லாங்குழலின் இனிமை நம்மை மேலிழுத்துச் செல்லும்போதே பல்லவி தொடங்கியதும் பொத்தென்று பூமிக்குக் கொண்டுவருவதில் குறியாயிருக்கிறார் ராஜா. ஏன் ஐயா இத்தனை அவசரம்?

பல்லவியின் தாளத்தை தப்லாவும், காங்கோவும்(சரிதானே?) ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து உருவாக்கும் படிமத்தில் நிறைகிறது மேற்சொன்ன இருமை. பாட்டின் நடுவே வரும் இரண்டு இடையீடுகளுமே கலங்கிநிற்கும் நிகழ்காலத்தில் அடிபடிந்திருக்கும் நினைவோடைகளாகத் தெரிகின்றன. இதெல்லாம் கூடச் சரிதான் என்று நினைக்கும்போதுதான் தத்தித் தத்தி நிற்பவனின் காலை வாரிவிடுகிறார். நிலவும் சோகத்தைப் பகிர்ந்து அதிலிருந்து வெளிவருவதாக அமைந்துள்ள சரணங்களில் தாளப்படிமத்தை முழுமையாக தப்லாவே எடுத்துக்கொள்கிறது. சரணங்கள் முடிந்து பல்லவிகள் தொடங்கும்போதுதான் காங்கோ அதன் இடத்தில் வந்தமர்கிறது. எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் ராஜா?

எவ்வகை இசைத்துண்டையும் வெறும் உணர்வுக் குவியலாக்காமல், துல்லியமாகப் பிரித்தடுக்கி, இவ்வித விளையாட்டுக்களை நமக்கு நாமே பழகிக்கொள்ளவும் வெளியமைத்துத் தருவதில்தானே ராஜா நம்மை வென்றெடுக்கிறார்? சிலருக்கு இந்த விளையாட்டு முதல் நுகர்விலே பூர்த்தியாகலாம், சிலருக்கு மாதங்களாகும், என்போன்றவர்களுக்கு இன்னும் அதிகம். ஒன்று முடிந்தால் என்ன, அதான் நம் காலத்துக்கும் வகை வகையாக வாரி இரைக்கிறாரே?

பிரேமுக்கு எழுதியது: http://www.twitlonger.com/show/n_1rjusus

பாடல் வரிகள்: http://www.twitlonger.com/show/n_1rjusvv , நன்றி: பிரேம்

ஆற்றொழுக்கு

மலேசியா-வாசுதேவன்மலேசியாவை வித்தகக் கலைஞராக நிறுவுவதற்கு யாரும் பிரயத்தனப்படுவதேயில்லை. அதற்கான தேவைகள் இருப்பதாகவும் எனக்குத் தெரிந்ததில்லை. இருப்பினும் மலேசியாவைப் பிறருக்கு (குறிப்பாக டிஎம்எஸ்ஸுக்கு) மாற்றாகவோ, பிறரை நகலெடுக்கும் குரலாகவோ முன்னிறுத்தும் அடாசு வேலையைச் சிலர் தொடர்ந்து செய்வதில் எனக்குப் பெரும் வருத்தமும் கோபமுமுண்டு.

பின் எழுபதுகளில் மேலெழுந்து வரும் ராஜா எப்படி தன் முதல் வணக்கத்தை மெல்லிசை மன்னருக்கு வைத்தாரோ, அப்படித்தான் ’ஆட்டுக்குட்டி’யில் மலேசியாவும் வலது கையை இடது காலில் வைத்து டிஎம்எஸ்ஸுக்கு வணக்கம் வைத்ததாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னாட்களில் சிவாஜிக்கோ, சத்யராஜுக்கோ பாடும்போது இந்த மரியாதை தொடர்ந்ததென்பதுவரைதான் சரி. இத்தொடரின் முக்கியப் புள்ளியாக நான் நினைப்பது:

(’இதயமே’ – ’அடுத்தாத்து ஆல்பர்ட்’) – இங்கு மேற்சொன்ன இருவருமே பயணிக்கின்றனர், தனித்தன்மையுடன். இவற்றை ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு மலேசியாவின் ஆளுமையை ’அவருக்கேயுரிய இடத்தில’மர்ந்து மட்டுமே பேச நினைக்கிறேன்.

ராஜா உருவாக்கிய அல்லது கட்டமைத்த களங்களில் எனக்கு மிக நெருக்கமான ஒன்றை நான் #RajaGrande என்று வகைப்படுத்துவதுண்டு. இசையறிவு துளியுமில்லாததால் இவ்வகைமையைத் தெளிவாக வரையறுக்க என்னால் இதுவரை முடிந்ததில்லையெனினும் இன்று துணிந்து முயற்சிசெய்கிறேன்: ஓரளவு மெத்தனமான அல்லது அதிகபட்ச வேகமில்லாத மெட்டு, அதைச் சுற்றி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்படியோ அல்லது மெட்டை இருமடங்கு உயர்த்திப் பிடித்தோ செல்லும் தாளக்கட்டு. தறிகெட்ட வெள்ளத்தில் துடுப்புகளின்றித் தன்னியல்பான வேகத்தில் நகரும் ஓடமொன்றில் அமர்ந்து இருகரைகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போன்றதுதான். இப்படி இருந்தால்தான் நான் நினைக்கும் உணர்வு கிடைக்கும் என்பதுமில்லை. எதற்கும் இந்தப் பட்டியலைப் பார்த்திடுங்களேன்: http://www.paadal.com/playlist/rajafans/GrandeRaja

இக்களம் தரும் பிரம்மாண்டத்தில் ஒரு பாடகர் பெரிதாக என்ன செய்துவிட முடியும்? மலேசியா தனதாக்கிக் கொண்ட #RajaFolkஉம் எனக்கு நானே அடையாளப் படுத்திக்கொண்ட #RajaGrandeவும் ஒன்றிணைவதாக நினைக்கும் பாடல் இது: (’கன்னிப் பொண்ணு’ – ’நினைவெல்லாம் நித்யா’)

கன்னிப்பொண்ணு கைமேல(லே)

கட்டிவெச்ச பூமாலை(லெ)

பாடல் முழுவதுமே நமக்கு லட்டுதான் என்றாலும் திராட்சை நிரம்பிய பகுதிகளாக நான் சரணங்களை எடுத்துக்கொள்கிறேன். பல்லவியின் இரண்டு வரிகளை மேலே தந்ததற்கும் நான் கற்பித்துக் கொண்ட காரணங்களுண்டு – சம்பந்தப்பட்டது ராஜா என்பதால் இவ்வித கற்பிதங்களுக்கு முன்னனுமதி பெற்றுவிட்டேன். முதல் சரணத்தில் ஆண் பெண்ணுக்கு மாலையணிவிப்பதாகவும் இரண்டாவதில் பெண் அணிவிப்பதாகவும் நினைப்பதுதான் அது. குறிப்பிட்ட நபர் ஒரு வரியை முன்னெடுத்துச் சென்று சிறிது தயக்கம் கலந்த வெட்கத்துடன் அடுத்தவரிடம் ஒப்படைப்பதும் அவர் அதைத் தாங்கி ஏற்பதுமாகச் சரணங்களைத் தொடுத்திருக்கிறார் ராஜா.

இவையனைத்தும் நடக்கும் அட்டகாசமான நாடகத்தை நிகழ்த்திக் காட்ட நமக்குக் கிடைத்திருப்போர் மலேசியாவும் சுசீலாவும். திரைநடிப்பென்பதைப் பின்னணியில் மட்டுமின்றி திரையிலும் முயற்சிசெய்தவர் மலேசியா. பாடல் முழுவதும் தன் நடிப்பாற்றலைக் குரலில் அனாயசமாகக் கடத்திவிடுகிறார். ’.. அச்சம் கொண்டது..’, ’..நெஞ்சு துடிக்கிது..’ ஆகிய இடங்களில் மட்டுமே சுசீலாவுக்கு இது கைகூடுகிறது. இருவரது வயதையும் மேற்சொன்ன வகைமைகளையும் நாம் நினைத்துக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கிறேன்.

‘வானம் மெல்ல’வின் ’தருணம் தருணம்’ போன்றதொரு நெகிழ்வை இங்கு ‘முத்தம் தர தம்தர யாரது கண்டது’வில் கொண்டு வரும் வாய்ப்பு மலேசியாவுக்குக் கொடுக்கப்பட்டதுதான்(அமைந்ததாகவே இருந்தாலும்) ’முத்தாய்ப்பு’.